search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தியா தாயார்"

    வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி என் மகள் சந்தியாவை மொட்டை அடித்து, அவரது கணவர் கொடுமைப்படுத்தியதாக தாயார் கண்ணீருடன் தெரிவித்தார். #BodyPartsInDumbyard #WomanKilled
    ஆலந்தூர்:

    சந்தியா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் கன்னியாகுமரியில் இருந்து அவருடைய தந்தை ராதாகிருஷ்ணன், தாய் பிரசன்னா, தங்கை சஜிதா ஆகியோர் சென்னை பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் வந்தனர். பின்னர் சந்தியாவின் உடல் பாகங்களை பார்த்த பிறகு அது சந்தியாதான் என்பதை உறுதி செய்தனர்.

    சந்தியாவின் தாய் பிரசன்னா, நிருபர்களிடம் கண்ணீருடன் கூறியதாவது:-

    கணவன்-மனைவி இடையே நடக்கும் குடும்ப சண்டை என்றுதான் நினைத்தோம். பாலகிருஷ்ணன், ஆள் வைத்து எனது மகளுக்கு மொட்டை அடித்து உடலில் ஆண்களை வைத்து பச்சை குத்தியதாக சந்தியா கூறினார். மொட்டை அடிக்கக்கூடாது என்று நான் சொன்னேன். அடிக்கடி என் மகளை தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். சில விஷயங்கள் பற்றி எங்களிடம் சந்தியா எதுவும் கூறமாட்டாள்.

    நகைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டார். நான் செலவுக்கு பணம், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி தருவேன். ஆனாலும் கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விவாகரத்து பெறப்போகிறேன் என தூத்துக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தாள்.

    அப்போது போலீசார் அழைத்து என்னிடம் கேட்டார்கள். நான், 2 குழந்தைகள் இருப்பதால் பிரித்துவிடவேண்டாம் என்று கூறினேன். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சந்தியா சென்னைக்கு வந்து வேலை செய்வதாக கூறினாள்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன், என்னிடம், நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம் என்றும், பாஸ்போர்ட் எடுத்துவிட்டோம் என்றும், வெளிநாட்டுக்கு வேலைக்கு போவதாகவும் கூறினார். ஆனால் என் மகளை கொடுமைப்படுத்தி கொலை செய்து உள்ளார். அவர்களுக்குள் என்ன பிரச்சனை? என்று எனக்கு தெரியாது. கடந்த சில ஆண்டுகளாக மாமியார், கொழுந்தனின் மனைவி ஆகியோரும் சந்தியாவை கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சந்தியாவின் தங்கை சஜிதா கூறியதாவது:-

    அக்காவிடம் இருந்து போன் வந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அவளை பற்றி எங்களுக்கு எந்தவித தகவலும் தெரியவில்லை. இதற்கிடையில் பாலகிருஷ்ணன், என் தாய்க்கு போன் செய்து, நீங்கள் சந்தியாவை தேடவேண்டாம். வெளிநாட்டுக்கு போக பாஸ்போர்ட் எடுத்துவிட்டோம் என்றார்.

    இதனால் அவர் அக்காவுடன் நல்லமுறையில் இருக்கிறார் என்று சந்தோஷமாக இருந்தோம். ஆனால் அவர் 19-ந்தேதியே எனது அக்காவை கொலை செய்துவிட்டார். கையில் பச்சை குத்தப்பட்டு இருப்பதை கண்டுதான் அது சந்தியா என்று உறுதிசெய்தோம். கணவர் கொடுமைப்படுத்தியதால் விவாகரத்து கேட்டு சந்தியா மனு அளித்து இருந்தாள்.

    எனது அக்காவுக்கு 8 முறை மொட்டை போட்டு இருக்கிறார். என்ன காரணம் என்று எங்களுக்கு தெரியாது. அக்காவின் மாமியாரும் அவரை கொடுமைப்படுத்தி உள்ளார். அனுசரித்து வாழ் என்று எனது அம்மா கூறினார். பாலகிருஷ்ணன் தேடவேண்டாம் என்று கூறியதால் நாங்கள் கவலைப்படவில்லை. டிசம்பர் மாதம் ஊருக்கு வந்த அக்கா, ரூ.75 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு சென்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வழக்கில் குற்ற சம்பவங்கள் அனைத்தும் ஜாபர்கான்பேட்டையில் நடந்ததால் இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்தபின்னர், குமரன்நகர் போலீசுக்கு மாற்றப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். #BodyPartsInDumbyard #WomanKilled
    ×